சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 – 2017 – மேஷம் முதல் மீனம் வரை – பொதுப் பலன்கள்

சனி பகவான் கிரகஸ்துதி
நீலாஞ்சன ஸமா பாஸம்
ரவி புத்ரம், யமா க்ரஜம்
ச்சாய மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்

சனி பகவான் காயத்ரி மந்திரம்
காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசொதயாத்||

சனிபகவான் இவ் ஆண்டு 16.12.2014 திகதி செவ்வாய்கிழமை (மார்கழி 01ம் நாள்) பிற்பகல் 2:44 மணி முதல் விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாவதாக வாக்கிய பஞ்சாங்கமும்; 02.11.2014 ஞாயிற்றுக்கிழமை (ஐப்பசி மாதம் 16 ஆம் நாள்) இரவு 8.54 மணிமுதல் துலாம் ராசியில் இருந்து விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாவதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணிக்கின்றன. திருநள்ளாறு சனீஸ்வரன் ஆலயத்தில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்துள்ள 16.12.2014 அன்றே விஷேட பூசைகள் நிகழ ஒழுங்குகள் செய்யப் பெற்றுள்ளன.

மேஷம் ராசிக்கு அஷ்டம சனியும்,

ரிசபம் ராசிக்கு கண்டச்சனியும்,

சிம்மம் ராசிக்கு அர்த்தாஷ்டம சனியும்,

துலாம் ராசிக்கு ஏழரை சனியில் பாத சனியும்,

விருச்சிகம் ராசிக்கு ஏழரை சனியில் ஜென்ம சனியும்,

தனுசு ராசிக்கு ஏழரை சனியில் விரய சனியும் ஆரம்பிக்கிறது.

அண்டத்தில் லட்சகணக்கான விண்மீன் குடும்பங்கள் ( நட்சத்திரங்கள்) உள்ளன. அவற்றுள் எம்மைச் சூழ்ந்துள்ள சூரிய-விண்மீன் குடும்பமும் ஒன்றாகும். இந்த சூரிய குடும்பத்தில் பல கிரகங்களும், அவற்றின் துணைக் கிரகங்களும் உள்ளன. அவை யாவும் சூரியனை மையமாக கொண்டு அதனைச் சுற்றி் வலம் வருகின்றன. இவற்றுள் நாம் இருக்கும் பூமியும் ஒன்றாகும்.

பூமி சூரியனை மையமாக கொண்டு ”Ecliptic” எனப்படும் கிரக சுற்றுப் பாதை வலயத்தினூடாக தனக்கென அமைந்த பாதையில் நாம் ஆலயத்தை சுற்றி பிரதட்சணம் செய்யும் போது நாமும் சுற்றிக்கொண்டு ஆலயத்தை சுற்றுவதைப்போல் தாமும் சுழன்று கொண்டு சூரியனை வலம் சுற்றி வருகின்றது. பூமியின் உடன் பிறப்புகளான மற்றைய 7 கிரகங்களும் ”கிரக சுற்றுப் பாதை” வலயத்தினூடாக தமக்கென அமைந்த பாதைகளில், தத்தமது வித்தியாசமான வேகங்களில் சூரியனை சுற்றி வருகின்றன என்பதுவும் விஞ்ஞானிகளின் முடிபு. அதனால் அவை சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுக்கும் காலம் வித்தியாசப்படுகின்றன.

வானியலும் ராசிக்கட்டமும் ;
பூமி சூரியனௌ சுற்றிவரும் சுற்றுவட்ட பாதை சுமார் 149.59787 மில்லியன் கிலோமீட்டர். அது மணிக்கு 108000 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றுகிறது. 360 டிகிரி வட்ட பாதையை நாள் ஒன்றிற்கு 1 டிகிரி விதம் கடக்கிறது. பூமி சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் ஆகும். இது ஓர் ஆண்டு என சூர்ய சித்தாந்தப்படி கணக்கிடப்படுகிறது. 360 டிகிரியைதான் 12 ராசிகட்டங்களாக ஒரு ராசிக்கு 30 டிகிரி வீதம் கணக்கிட்டு பிரிக்கப்பட்டிருக்கிறது.

புவியில் கோள்களினால் ஏற்படும் எல்லா (நிகழ்வுகளையும்) மாற்றங்களையும் உணர்ந்து கொள்வதற்கும், சோதிடப்படி கணக்கிடுவதற்கும், கோள்களின் நிலைகளையும், நகர்வுகளையும் பூமிக்கு சார்பாக கணித்துக் கொள்வதற்கும் சோதிட சாஸ்திரம் புவியை மையமாகக் கொண்ட கற்பனையான “Zodiac” என்றழைக்கப்படும் இராசி மண்டல வலயம்” அல்லது “அயன வீதி” என்ற ஒரு முறைமையை பயன்படுத்துகின்றது.

Zodiac என ஆங்கிலதில் அழைக்கப்படும் இராசி மண்டல வலயம்; கண்ணிற்கு புலப்படாத ஒரு கற்பனை வடிவமாகும். இவ் வலயம்; சூரியனை மையமாக கொண்டுள்ள Ecliptic எனப்படும் கிரக சுற்றுப் பாதைக்கு இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியெனக் கூறலாம். பூமியை சுற்றியுள்ள கற்பனையான இராசி மண்டல வலயத்தினூடாக சூரியன் உள்ளிட்ட எல்லாக் கிரகங்களும் பூமியை சுற்றி வருவதாக சோதிடம் கணிக்கின்றது.

கிரகங்கள் சூரியனை வலம் வரும்போது நீள் வட்டமாக சுற்றுவதனால் Ecliptic எனப்படும் கிரக சுற்றுப்பாதை முட்டை வடிவமாக அமைந்துள்ளது. அதுபோல் Zodiac என்று அழைக்கப்படும் இராசி மண்டல வலயமும் முட்டை வடிவினதாக அமைகின்றது.

பூமியின் துருவ அச்சினை மையமாகக் கொண்டு பூமியைச் சுற்றி உள்ள “Zodiac” எனப்படும் கற்பனை இராசி மண்டல வலயத்தில் ” உள்ள 360 பாகைகளையும் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாக பிரித்து கணிக்கப்பட்டுள்ளது. அவை 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் என்பன.

வான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் இராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (21/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.

ஒவ்வொரு கிரகமும் தாம் இருக்கும் இராசியில் இருந்து அடுத்த ராசிக்கு இடம் பெயர்தலை ”பெயர்ச்சி” என்று அழைக்கப்படுகிறது. எல்லா கிரகங்களுக்கும் பெயர்ச்சி உள்ளது என்ற போதிலும், சனிப்பெயர்ச்சி மற்றும் குருப்பெயர்ச்சி முக்கியமானதாக கருதப்படுகிறது. சனிபகவான் சூரியனை சுற்றி வர 30 ஆண்டுகள் ஆகும். மொத்தம் 12 ராசிகள் உள்ளதால், ஒவ்வொரு ராசியில் இருந்து இடம் பெயர இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதைத் தான் சனிப்பெயர்ச்சி என்கிறோம்.

சனி சஞ்சாரம்
ஏழரைச் சனி என்பது ஒருவருடைய ஜாதகத்தில் (சந்திரன் நிற்கும்) சந்திர ராசியிலும் அதற்கு முந்தைய ராசியிலும், பிந்தைய ராசியிலும், சனி சஞ்சரிக்கும் காலம் ஆகும். அதாவது, முந்தைய ராசியில் 2.5 வருடம், அந்த ராசியில் 2.5 வருடம், பிந்தைய ராசியில் 2 ½ வருடம், ஆக மொத்தம் 7.5 வருட காலத்தை ஏழரைச் சனி என அழைக்கிறார்கள். ஒவ்வொருவருடைய 30 ஆண்டு கால வாழ்க்கையிலும் 7.5 சனி ஆதிக்கம் இருந்து கொண்டே இருக்கும். சனீஸ்வரன் ஜாதகரின் இராசிக்கு 12, 1, 2 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும். அஷ்டம ஸ்தானமான 8ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும். 4ல் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7ல் சஞ்சரிப்பதை கண்ட சனி என்றும் கூறுவார்கள்.

2ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினை, வீண் வாக்குவாதம், சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.

3ல் இருந்தால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி தைரியம் துணிவு தாராள பண வரவு உண்டாகும்.

4ல் இருந்தால் கல்வியில் இடையூறு, தாய்க்கு தோஷம், அசையா சொத்து அமைய இடையூறுகள், சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும்.

5ல் இருந்தால் புத்திர தோஷம் பூர்வீக தோஷம் தத்து புத்திர யோகம் உறவினர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும்.

6ல் இருந்தால் எதிரிகளை பந்தாடும் பலம் வலிமையான வாழ்க்கை வாழும் அமைப்பு எதிர்பாராத பண வரவுகள், தைரியம், துணிவுடன் வாழும் அமைப்பு உண்டாகும்.

7ல் சனி இருந்தால் திருமணம் தாமதம், அமையும் வரன், வயதான தோற்றம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.

8ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம் எதிரிகளால் கண்டம் கண்களில் பாதிப்பு உண்டாகும்.

9ல் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.

10ல் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு, அடிமைத் தொழில், பொதுப் பணியில் ஈடுபடும் அமைப்பு, மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும். 10ல் சனி இருந்தால் பதவிகளில் திடீர் இழப்பு உண்டாகும். கோட்சாரத்தில் 10ல் சனி வந்தால் கூட ஜீவனத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.

11ல் இருந்தால் நோயற்ற வாழ்வு எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை, தன சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.

12ல் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள், கட்டில் சுக வாழ்வு பாதிப்பு ஏற்படும்.

ஏழரைச் சனி: பொதுவாக ஒருவரது வாழ்நாளில் மூன்று முறை ஏழரைச் சனி வரலாம். ஒருவனுடைய வாழ்நாள் 120 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுமையால் அவன் 120 வருடங்கள் வரை வாழ்ந்தால் நான்கு முறை ஏழரைச் சனி வரலாம். ஜென்ம சனியின் காலத்தில் பிறந்தவர்கள், 60 வயதில் மூன்றாவது சுற்றை கடந்து விடுவார்கள். இதில் சிலர் மரணத்தையும், சிலர் நீண்ட ஆயுளையும் பெறுவார்கள்

முதல் சுற்று – மங்கு சனி :
இளம் பருவத்தில் நிகழும் முதன் சுற்று சனிக்கு மங்கு சனி என்று பெயர். இதில் அவ்வளவு பாதிப்பு இருக்காது.

இரண்டாம் சுற்று – பொங்கு சனி :
வாலிப பருவத்தின் மத்தியில் ஏற்படும் சுற்று பொங்கு சனியாகும். இதில் சனியின் பாதிப்பு அவ்வளவு கடுமையாக இருக்காது. ஒரு சிலருக்கு சனி விடுபடும் காலத்தில் மங்காத செல்வத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளி கொடுத்துவிட்டு செல்லும்

மூன்றாம் சுற்று – தங்கு சனி :
பொதுவாக 60 வயதை கடந்தவர்கள் தங்கு சனியை சந்திப்பார்கள். இந்த தங்கு சனி தகுந்த செல்வம், உற்றார், உறவினர், பேரன், பேத்திகள், நண்பர்களுடன் மகிழ்ந்திருக்க வேண்டிய காலம். ஆயுள்காரகனின் அருள் இருந்தால் ஆனந்தமாக தங்கு சனியை கடந்து விடலாம்.

நான்காம் சுற்று – மரணச் சனி :
நான்காவது சுற்றான இறுதி சனி, ஒருவரது 90வது வயதிற்கு மேல் ஏற்படும். இந்த மரணச்சனியுடன் பூலோக வாழ்க்கை முடிந்து இறைவனை அடைவார்கள். பொதுவாக ஏழரை சனி காலத்தில் நமக்கு சனி பகவான் கஷ்டங்களைக் கொடுத்து சரியான பாதையில் செல்ல நம்மை பக்குவப்படுத்துகிறார். எப்படி கல்லை செதுக்கி செதுக்கி சிற்பமாக ஆக்குகிறார்களோ, அதேபோன்று நம்மை கஷ்டங்களுக்கு உட்படுத்தி சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய வகையில் சனி மாற்றுகிறார் என்றால் மிகையாகாது.

சனிபகவான் குறித்த சில தகவல்கள் :
சனிக்கு உகந்த தானியம் எள்ளானதால் எள் சாதம், நல்லெண்ணெய் தீபம் ஏற்றது. சனிக்கு உகந்தவர் ஆஞ்சநேயர், விநாயகர், திருப்பதி பெருமாள். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தி, உளுந்து வடை மாலை சாற்றி, உள்ளன்போடு துதிக்க சனியின் துன்பங்கள் குறையும். புரட்டாசி சனி விரதம் இருப்போர் எள்ளு சாத நிவேதனம் செய்து, விநியோகம் செய்ய வேண்டும். “உன் பக்தர்களை அண்டமாட்டேன்” என்று சனி பகவான் பெருமாளிடம் வாக்குக் கொடுத்துள்ளதாக புராண வரலாறு!

சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிக்க மகிமை வாய்ந்தது. சிவபெருமான் பாற்கடலில் பொங்கிய விஷத்தைப் பருகிய நாள் சனியாதலால், அன்று விரதம் இருந்து பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று வழிபட்டு, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் விளக்கேற்றி, எள் நைவேத்யம் செய்து வழி பட்டால் சனியின் அருள் பெறலாம்.

சனி பகவானின் வாகனம் காக்கை. அது இறந்து போன முன்னோரின் பிரதி நிதியாகக் கருதப்படுவதால், தினமும் காக்கைக்கு அன்னமிடுவதால் சனியின் பாதிப்பு குறையும். இந்து மதம் தவிர புத்த, ஜைன மதங்களிலும் சனி வழிபாடு உள்ளது. புத்த மதத்தில் சனி தண்டம் ஏந்தியவராய், ஆமை வாகனம் கொண்டவராகவும், ஒன்பது கிரகங்களில் ஏழாம் இடத்தை உடையவராயும் வணங்கப்படுகிறார்.

கைரேகையில் சனிபகவான்:
சனி மேடு: உள்ளங்கையில் சனி மேடு(சனி விரலான நடு விரலுக்கு கீழ் உள்ள பகுதி) பெரிதாக, நேர்கோடுகள் நன்றாக அமைந்திருந்தால் சிறப்பு. இதனால் கடமையுணர்ச்சி, திட சிந்தனை, பொறுப்புணர்வு ஆகியவை வளரும்.

ஜாதகத்தில் சனீஸ்வரர் பலம் பொருந்தியிருந்தால் என்ன பலன்:
சனி பகவான் கர்மகாரகர் என்று அழைக்கப்படுகிறார். இவரின் பலம் பெற்றவர்கள் அதிகம் உழைக்க வேண்டிவரும். எந்த அளவிற்குப் பாடுபடுகிறார்களோ அந்த அளவிற்குப் பயன் கிடைக்கும். உழைப்புக்குப் பின் வாங்கக் கூடாது. சமுதாய நலப் பணிகளிலும் ஈடுபடலாம். அதனால் பெயரும், புகழும் உயரும். வேதாந்த ஞானம் உண்டாகும். இரக்க சுபாவம் அதிகரிக்கும். மேலும் சனிபகவான் கஷ்டங்களைத் தாங்கும் சக்தியைக் கொடுப்பார். இவர் செவ்வாய்,ராகு, கேது பகவான்களால் பாதிக்கப்படாதவரை மாறாத தன்னிலை உள்ளவர்.

சனி பகவானின் பலம் கூடியிருப்பவர்கள் பஞ்ச பூத தத்துவங்களில் வாயு தத்துவத்தின் மூலம் நன்மைகளைப் பெறுவார்கள். பெருக்கவும், இளைக்கவும் கூடிய உடலமைப்பைப் பெற்றவர்கள் இவர்கள். சாதாரண விஷயத்திற்குக்கூட அதிகம் கோபப்படுவார்கள். செய்யும் தொழிலில் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டிருப்பார்கள். இங்குமங்கும் அலைந்து திரிவார்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். நல்ல தோற்ற அமைப்பு பெற்றிருப்பார்கள். அதேநேரம் மந்தனாகிய சனி பகவானின் நல்லதோர் ஆதிக்கத்தைக் கொண்ட ஜாதகருக்கு, யோகம் தாமதித்தே ஏற்படும்.

திருக் கணித பஞ்சாங்கத்தினை பின்பற்றும் ஜோதிடரின் கணிப்பில்:

Click here – சனிப் பெயர்ச்சி பலன்கள் 2014 – 2017 – மேஷம் முதல் மிதுன ராசி வரை