காயத்ரி மந்திரம் மன, உடல்நலத்தைக் காக்கும் ஒரு ஜிம்

இந்த வருடம் ஆவணி 2ம் நாள் (18.8.2016) ஆவணி அவிட்டம் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த நாள் – ஆவணி 3 – 19.8.2016 – காயத்ரி மந்திர ஜபம். இந்த காயத்ரி மந்திரம் இந்த ஒருநாள் மட்டும்தான் என்றில்லாமல், ஒவ்வொரு நாளும் ஜபிக்கப்படவேண்டிய ஒன்று. அதன் மகிமைகளை இங்கே பார்க்கலாம்: நமது புராதன மந்திரங்களில் மிகவும் நேர்த்தியானதும், மிகவும் சக்தி வாய்ந்ததுமான மந்திரம் காயத்ரி மந்திரம்தான். விவரிக்க முடியாத அளவிற்கு அதற்குள் சக்தி அடங்கியுள்ளது. நம்முள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆன்ம சக்தியைத் தட்டி எழுப்பக்கூடியது காயத்ரி மந்திரம். ஓம் பூர்புவஸ்ஸுவஹ  தத்ஸ்வ விதுர்வ ரேணியம் பர்க்கோ தேவஸ்யதீமஹி தியோ யோ நப் பிரசோதயாத் – என்ற காயத்ரி மந்திரத்தின் பொருள்: ‘நம்முடைய புத்தியை நல்லனவற்றை மட்டுமே பற்றி நிற்குமாறு தூண்டுகின்ற ஒளிமயமான பகவானுடைய மங்கள ஸ்வரூபத்தை உபாசிக்கின்றேன்.’

ஜபம் செய்யும்போது மேற்கூறிய பொருளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவரவர் சக்தி, கிடைக்கும் நேரம் இவற்றுக்கு ஏற்ப 1008, 108, 64, 32 முறைகள் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம். மனதுக்குள்ளேயே மனனம் செய்து ஜபிப்பது ஒரு வகை. முணு முணுத்து ஜபிப்பது இரண்டாம் வகை. பிறர் காதில்படும்படி உயர்ந்த குரலில் ஜபிப்பது மூன்றாம் வகை. உயர்ந்த குரலில் ஜபிப்பதை விட முணுமுணுத்து ஜபிப்பது நூறுமடங்கு சிறந்தது. முணு முணுப்பைவிட மனத்தளவில் ஜபிப்பது ஆயிரம் மடங்கு சிறந்தது. காயத்ரி ஜபம் செய்யும்போது இரண்டு உள்ளங்கைகளையும் சிறிது வளைந்து முகத்துக்கு நேராக உயர்ந்து இருக்க வேண்டும். விரல்கள் சேர்ந்திருக்க வேண்டும். ஜபிக்கப்படும் காயத்ரி மந்திர எண்ணிக்கையை வலது மோதிரவிரலின் நடுக்கணுவிலிருந்து ஆரம்பித்து வலமாக, ஒவ்வொரு விரல் கணுக்களையும் கட்டைவிரலால் தொட்டுக்கொண்டு ஆள்காட்டி விரலின் கீழ்க்கணுவை அடைந்து மறுபடி அங்கிருந்து இடமாக சுற்றிக்கொண்டு மோதிரவிரலின் நடுக்கணுவை வந்து அடையவேண்டும்.

Astro-articles-222

இந்தக் கணக்குப்படி 20 முறை ஜபித்ததாக எண்ணிக்கை வரும்.  இப்படி அடுத்தச் சுற்று, அதற்கடுத்த சுற்று என்று தொடரலாம். தூணிலோ சுவரிலோ சாய்ந்திராமல் நேராக நிமிர்ந்து உட்கார்ந்து ஜபிக்க வேண்டும். பூஜை அறையில் இறைவனுக்கு முன் உட்கார்ந்து உச்சரிப்பது மிகச் சிறந்தது. இந்த மந்திரத்தைச் சொல்வதால், உயிர் வலிமை பெறும், உடலில் சக்தி அதிகமாகும். பகைவர்களை வெல்லும் திறமை ஏற்படும். எல்லாவற்றுக்கும் மேலாக அறிவு சுடர்விட்டுப் பிரகாசிக்கும். உள்ளம் தூய்மை அடையும். உள்ளுள் இருக்கும் ஆன்ம ஒளி, காயத்ரியை ஜபிப்பவன் முகத்தில் ஞான ஒளியாக மலரும். நீண்ட ஆயுளும், காலத்தை திறமையாக, ஆக்கப்பூர்வமாகக் கையாளும் திறனும் ஏற்படும். காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர், “மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892-1964), காயத்ரி மந்திரம் ஒவ்வொரு பரிசோதனைக் கூடத்தின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்துள்ளார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் “நதிகளில் நான் கங்கையாகவும், மலைகளில் நான் விந்திய மலையாகவும், மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்” என்று தெரிவித்திருக்கிறார். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்ஸர், “பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும், காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிகச் சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது” என்று காயத்ரி மந்திரத்தின் மேன்மையைப் புகழ்ந்துள்ளார். பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் “காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்” என வியப்புடன் தன் அபிப்ராயத்தைப் பதிவு செய்துள்ளார்.

ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823-1900) அவர்கள் “ஒளியினை தவம் செய்து நம் மூள மற்றும் மனதினை உயர்த்துவோம்” என அறிவுறுத்தியுள்ளார். மகாத்மா காந்தி, “யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்” என்று அனுபவபூர்வமாகத் தெரிவித்துள்ளார். காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் நோக்கமே, ‘உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்’ என்பதாகும். இம்மந்திரம் சொல்லப்படும்பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றன. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்படுவதற்கு ஜாதி, மதம் என்ற எந்த பேதமையும் கிடையாது. இம்மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம்மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய்தான் காயத்ரி தேவி. இம்மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள்.

இத்தேவிக்கு சாவித்திரி, சரஸ்வதி என்ற பெயர்களும் உண்டு. காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக, உண்மையான சிந்தனை, சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடு சொல்ல வேண்டும். காலை, மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். இருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள், கவலைகள் நீங்கும். குறிப்பாக, பள்ளி மாணவர்கள் திறமையாகப் படிப்பார்கள். காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்: கம்பீரத் தோற்றம், திடமான பேச்சு,வறுமை- குறைகள் நீங்குதல், பாதுகாப்பு வட்டம்,கண்ணில் ஞான ஒளி தெரிதல், அபாயம், விரும்பத்தகாத சூழ்நிலை நீங்கும், நரம்புகளும், சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும், அமைதியாய் இருப்பர், நற்செயல்களில் ஈடுபடுவர், காந்த சக்தி உருவாகும், வாழ்க்கையில் தடைகளை நீக்கும், மூளையை பிரகாசிக்கச் செய்யும், உள்ளுணர்வினை தெளிவாக்கும், உயர் உண்மைகள் தெரிய வரும்.

டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். இதற்காக மேலும் ஆதாரபூர்வமான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு ஆரம்பித்து சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புகிறார்களாம்! இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும், மனதின் இருளினை நீக்க வேண்டுவதாகவும் அமைந்துள்ளதால், இம்மந்திரம் இந்தியா மட்டுமல்லாமல், பல வெளிநாடுகளிலும் பெரிதும் வரவேற்கப்படுகின்றது. காபி, டீ அருந்துவது போன்ற ஒரு பழக்கத்தை நாம் கைவிட விரும்பினால் அவ்வாறு அப்பழக்கம் நம்மை விட்டு நீங்க சில நாட்கள் ஆகலாம். அது நம் மனத்திண்மையைப் பொருத்தது. அதேபோல தியானமோ, மந்திரமோ அது நமக்கு உகந்ததாகப் பழக்கமாக, மனமொப்பி நாம் ஈடுபடவும் சில நாட்கள் ஆகும்.

தேவையற்ற, உடல்நலனுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பழக்கத்தை விட எப்படி சில நாட்கள் ஆகிறதோ, அதேபோல நல்ல பழக்கத்தை மேற்கொண்டு அதை நிரந்தரப் பழக்கமாக ஆக்கிக்கொள்ளவும் சில நாட்கள் ஆகலாம். ஒரு வழக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் தினமும் நாம் மேற்கொள்ளும்போது ஆரம்பத்தில் கடினமாக அது தோன்றினாலும், நாளாவட்டத்தில், நம் இருதய சுத்தியாலும், முயற்சியாலும், பயிற்சியாலும் அது நமக்குக் கைகூடும். உதாரணமாக தினமும் அதிகாலையில் 4 மணிக்கு எழுந்திருப்பது என்ற வழக்கத்தை நாம் மனப்பூர்வமாக ஆரம்பித்தோமானால், அது மழைக் காலமாக இருந்தாலும் சரி, பனிக்காலமாக இருந்தாலும் சரி, நோய்வாய்ப்பட்டிருந்தாலும் சரி, மிகச்சரியாக காலை 4 மணிக்கு நமக்கு விழிப்பு ஏற்பட்டுவிடும். அந்தவகையில் காயத்ரி மந்திரத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட ஒரே நேரத்தில் ஜபிப்பது பல நன்மைகளையும், ஆக்கபூர்வமான சமுதாயப் பலன்களையும் அளிக்கும்.

காயத்ரி மந்திரத்தை 3 நிமிடங்கள் ஜபிப்பது நம்மைச் சுற்றியுள்ள மின்காந்த அலைகளின் பாதிப்பை நீக்கும், ரத்த ஓட்டம் சீர்படும். ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது நம் மூளை செயல்திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நன்மையான மாறுதல்கள் ஏற்படும். 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும், சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும். 22 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும், தியானம் செய்வதும் ஒருவரின் மனநிலையை சமனப்படுத்தும். தடுமாற்றமில்லாத, நிலையாக, தெளிவாக சிந்திக்கவைக்கும் ஆக்கப்பூர்வமான மனப்பான்மையை அளிக்கும். உள்ளுணர்வைப் புதுப்பிக்கும். 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். சுவாசத்தை சீராக்கும். அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்கும்.

62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் “க்ரே” பகுதியில் (Grey Matter) மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன. இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனமும், மூளையும் அடைகின்றன. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படவைக்கும். – மேற்கூறப்பட்டுள்ள கருத்துகள் விஞ்ஞானபூர்வமானவை இல்லை என்றாலும், பல்லாயிரக்கணக்கானோரின் அனுபவ கருத்துகள் என்பது உண்மை. மகாத்மா காந்தியடிகள் தனது ‘இயற்கை வைத்தியம்’ என்ற புத்தகத்தில் ‘ஒரு மருத்துவரின் கடமை, நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல; அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்,’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது காயத்ரி மந்திரம் ஜபித்தல் போன்ற பயிற்சியினை அந்த மருத்துவர் மேற்கொண்டிருந்தாரானால், அவ்வாறு நோயாளியின் உடலை மட்டுமல்லாமல் ஆன்மாவை ஆரோக்கியப்படுத்தும் முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பது அவரது கருத்து.