உலகின் முதலாவது கண்ணாடிக்கோயில் அருள்மிகு ராஜகாளி அம்மன்

உலகின் முதலாவது கண்ணாடிக்கோயில் அருள்மிகு ராஜகாளி அம்மன் ஆலயம் ஜோகூர் மலேசியா(Rajakaali Amman temple Johore Malaysia)

கடல் கடந்து சென்று, பல்வேறு நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள், தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம், தங்களின் கலாசார முத்திரையை அழுத்தமாக பதிக்க தவறுவது இல்லை. மலேசியாவின் கோலாலம்பூர் அருகே, பிரமாண்ட முருகன் சிலையுடன் கூடிய கோவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதுமிருந்து சுற்றுலா பயணிகளும், இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

தற்போது, மலேசியாவுக்கும், அங்கு வசிக்கும் தமிழர்களுக்கும், மேலும், பெருமை சேர்க்கும் வகையில், முழுக்க முழுக்க, கண்ணாடியால் கட்டப்பட்ட, ராஜகாளி யம்மன் கோவிலும், உலகம் முழுவதும் உள்ள இந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Isf8TpFAmir

ஆலய வரலாறு:

மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் அமைந்துள்ள மிகப் பழமையான ஆலயம் அருள்மிகு ராஜகாளியம்மன் ஆலயமாகும். முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட மலேசியாவின் முதல் கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகூர் சுல்தானால் வழங்கப்பட்ட நிலத்தில் 1922ம் ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டதாகும். பல தடைகளைத் தாண்டி ஜோகூர் பஹ்ரு பகுதியின் மிகப் பெரியக் கோயிலாக இக்கோயில் உருவெடுத்தது.

1991ம் ஆண்டு தனது தந்தை சிவச்சாமிக்கு பிறகு சின்னத்தம்பி கோயிலின் தலைவராக பொறுப்பேற்றார். இவர் காளியம்மன் கோயிலை மிகப் பெரிய தலமாக உருவாக்க தனது வாழ்நாளையே அர்ப்பணம் செய்தவர். மின்னத்தம்பி கோயில் நிர்வாகத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு, கோயிலில் மேலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. இந்து ஆகம விதிப்படி பல மாற்றங்கள் செய்யப்பட்டு, அருள்மிகு மகாகாளியம்மன் திருக்கோயில் எனப் பெயரிடப்பட்டது.

சுமார் 21 ஆண்டுகள் பலவித தடைகள், போராட்டங்கள் ஆகியவற்றைக் கடந்து காளியம்மனின் அருளால் இக்கோயிலில் காளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

1996ம் ஆண்டு இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பேராதரவு அளித்தனர். அதன் பின்னர் ஆகம விதிகளின்படி தினசரி பூஜைகளும், திருவிழாக்களும் தவறாது நடைபெற துவங்கியது. நாளடைவில் சின்னதம்பி இக்கோயிலின் ஆஸ்தான குரு ஆக்கப்பட்டார். இவரது ஆன்மீகப் பேச்சுக்களை கேட்க நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்கள் தங்களது சொந்த பிரச்னைகளுக்கும் இவரிடம் தீர்வு பெற்று செல்கின்றனர். இதனால் இவரது புகழ் மலேசியா முழுவதம் பரவத் துவங்கியது. அடிப்படையில் ஆசிரியரான இவர், இக்கோயிலின் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றி வருகிறார். மேலும் 2001ம் ஆண்டு நயனயுதம் நல்வாழ்வு கழகம் என்னும் அமைப்பு ஒன்றை நிறுவி, அதன் மூலம் கோயிலை நிர்மானித்து வருகிறார்.

ஆலய தெய்வங்கள்.

ராஜகாளியம்மன் கோயிலில் சிவன், விஷ்ணு, பெரியாச்சி அம்மனக்கு முறையே தனித் தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முருகன், விநாயகர், அம்பாள் என அனைத்து தெய்வங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவைகள் தவிர சாய்பாபா, ஷீரடி சாய்பாபா, ராகவேந்திரர், விவேகானந்தர், ராமகிருஷ்ணர் உள்ளிட்ட மகான்களுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

உலகின் முதல் கண்ணாடி கோயில் கோவிலின் தலைமை குருக்கள், ஸ்ரீ சின்னத் தம்பி சிவசாமி, சில ஆண்டுகளுக்கு முன், பாங்காக் சென்றிருந்தார். அப்போது, ஒரு இடத்தில், தூரத்தில், வைரக்கல் மின்னுவதை போன்று, ஒளிவீசுவதை, பார்த்தார். அங்கு சென்று பார்த்தபோது, ஒளிவீசிய அந்த இடம், ஒரு கோவில் என்பதையும், அது, முழுக்க முழுக்க, கண்ணாடியால் கட்டப்பட்டு
இருப்பதையும், பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.

அப்போது தான், ராஜகாளியம்மன் கோவிலையும், இதேபோல், நேர்த்தியாகவும், எழில் மிகுந்ததாகவும் மாற்ற வேண்டும் என, முடிவெடுத்தார். இதன்பின், மலேசியா திரும்பிய அவர், அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்தார்.

கோவிலின் வெளிப்புறம் மற்றும் உட்புறங்கள் முழுவதும், பல வண்ணங்களில் ஒளிவீசும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. தரைப் பகுதியில், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொசைக் கற்கள் பொருத்தப் பட்டன.

10 லட்சத்துக்கு மேல் கண்ணாடி துண்டுகள் பதிக்கப்பட்டுள்ளன. நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை, பழுப்பு, வெள்ளை ஆகிய 7 நிற கண்ணாடிகள் காண்போரைக் கவரும். கோபுரம் முதல் தரை, சுவர்கள், சன்னதி என எல்லா பகுதிகளும் வண்ணக் கண்ணாடிகளால் ஜொலிக்கிறது.

நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய, சிவப்பு, ஊதா, மஞ்சள் நிறங்களிலான, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணாடிகள், இந்த கோவிலில் பொருத்தப்பட்டன. கோவிலில் உள்ள தூண்கள், சுவர், மேற்கூரை ஆகிய அனைத்து பகுதிகளும், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டன. இந்த கோவிலில் பொருத்துவதற்காகவே, ஒளியை, வித்தியாசமாக பிரதிபலிக்கக் கூடிய, மின் விளக்குகள், ஆங்காங்கே பொருத்தப்பட்டன. மியான்மரைச் சேர்ந்த கண்ணாடி நிபுணர்கள் 9 பேர் இதை வடிவமைத்து உள்ளனர்.

இந்த விளக்குகளின் வெளிச்சம், கண்ணாடிகளில் பட்டு, பிரதிபலிக்கும் அழகை பார்ப்பதற்கு, கோடி கண்கள் வேண்டும். கோவில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. நன்கொடைகள் மூலமும், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலமும் கிடைத்த பணத்தில், ஐந்து கோடி ரூபாய் செலவில், ராஜகாளியம்மன் கோவில், நேர்த்தியாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒளி வெள்ளத்தில், சொர்க்கம் போல் மிதக்கும் இந்த கோவிலில் தரிசனம் செய்வதற்காகவும், இதன் அழகை காண்பதற்காகவும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இந்த அழகிய கோவில், மலேசியாவின் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.
கண்ணுக்கு விருந்தாகும் அற்புத புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.