செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்

ஒருநாள் துவாதசி தினம். இரவு முழுக்க கண் விழித்து ஏகாதசி விரதம் இருந்து வேத சாஸ்திரங்களை உச்சரித்தபடி ஒவ்வொரு வீதியிலும் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று ‘பிட்சா பவந்தேஹி’ என்று கூறியபடி பிச்சையெடுத்தார் சங்கரன்.

ஒரு எளிய வீட்டின் முன்னால் போய் நின்றார். சங்கரனின் குரலைக் கேட்ட அந்த வீட்டுப் பெண் பிச்சையிட தன் வீட்டிலிருந்த பானைகளை எல்லாம் திறந்து பார்த்தாள். உணவு இல்லை. அரிசியும் இல்லை.

பிச்சை கேட்டு வந்திருக்கும் அந்தச் சிவப்புதல்வனுக்கு என் கையால் பிச்சையிட இயலாத அளவிற்கு நான் ஏழையாகிப் போனேனே என்று மனதிற்குள் புழுங்கினாள். தேடிப் பார்த்ததில் ஒரே ஒரு நெல்லி வற்றல் இருந்தது. அந்த நெல்லி வற்றலோடு வாசலுக்கு வந்தாள்.

சங்கரனின் முகத்தைப் பார்க்கப் பெறாமல் அவர் வைத்திருந்த பாத்திரத்தில் அந்த நெல்லி வற்றலை இட்டாள். பசி என்று வந்திருக்கும் குழந்தைக்கு வெறும் நெல்லி வற்றலை மட்டும் தருகிறோமே என்று அவள் கண்கள் கண்ணீர் சிந்தின. அது சங்கரன் வைத்திருந்த பாத்திரத்தில் விழுந்தது.

சங்கரன் பாத்திரத்தில் இருந்த நெல்லி வற்றலையும் அந்தத் தாயின் கண்ணீரையும் பார்த்தார். உலகே துன்பத்திற்கு ஆளானது போல உணர்ந்தார். அந்தத் தாயின் அன்பில் உருகினார். அவள் மேல் கருணை கொண்டார்.

செல்வங்களுக்கெல்லாம் நாயகியான லட்சுமி திருமகளை நினைத்தார். இனி இந்த உலகில் யார் வறுமையில் வாடினாலும் இந்தப் பாடலைப் பாட அவர்களின் வறுமை ஒழிந்து செல்வம் கொழிக்கட்டும் என்று ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடத் தொடங்கினார்.

நெல்லி வற்றலைப் பிச்சையிட்ட அந்தப் பெண்மணியிடம் ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடிக் காட்டினார். ‘இந்தப் பாடலை பாடி திருமகளுக்கு ஆரத்தி செய். உன் வறுமை எல்லாம் தீரும் -’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

அந்தப் பெண்மணி தன் கணவன் வந்ததும் நடந்தவற்றைக் கூறினாள். அவளும் அவள் கணவனும் சேர்ந்து சங்கரன் கற்றுத் தந்த கனகதாரா ஸ்தோத்திரத்தைப் பாடி திருமகளை வழிபட்டனர். வறுமை குடியிருந்த அவர்களின் வீட்டில் தங்க மழை பொழிந்தது. அவர்கள் வறுமை தீர்ந்தது.

ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம் என்கிற அந்தப் பாடலின் தமிழ் விளக்கம் இதுதான்.

pv6cc6jj1

மொட்டுக்கள் விரிந்து மலர்ந்து அழகு செய்கின்ற தமால மரத்தை தேனை உண்டு வாழும் வண்டுகள் மொய்த்திருப்பதைப் போல திருமாலின் அழகுப் பொன்மேனியைச் சேர்ந்திருப்பவளே, எல்லா வகைச் செல்வங்களுக்கும் நாயகியான மங்களத்தைத் தரும் மகாலட்சுமியாகிய உன் கடைக்கண் பார்வை எளியவனான என் மேல் மங்களத்தை அளிக்கட்டுமாக.

பொன்னால் செய்யப்பட்ட குடங்களில் நிரப்பப்பட்ட தூய்மையான தேவ கங்கை நீரால் அட்டதிக்குகளைக் காக்கும் யானைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு அதனால் நனைந்த அழகு மேனியை உடையவளே. உலகிற்கு எல்லாம் அன்னையே. உலகத்தின் ஆசாபாசங்களை எல்லாம் ஆட்டுவிக்கும் நாயகனான திருமாலின் மனைவியுமானவளே. திருப்பாற்கடலின் புதல்வியே. மகாலட்சுமியே. உன்னை வணங்குகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கனகதாரா ஸ்தோத்திரம் பாடல்களைப் பாடித் துதிப்பவர்கள் அனைவரும் எல்லா நற்குணங்களும் நிறைந்தவர்களாகவும் எல்லாப் பேறுகளும் பெற்ற வர்களாகவும் சான்றோர்கள் கொண்டாடும் வகையில் சிறந்து விளங்குவார்கள் என்று சங்கரர் கூறியுள்ளார்.

சுயநலமின்றி பிறர் நலத்தைக் காக்கும் பொருட்டு பிறரின் வறுமையை ஒழிக்கும் பொருட்டு செல்வம் வேண்டும் யாவரும் இந்தப் பாடல்களைப் பாடி செல்வம் வேண்டினால் நிச்சயம் அவர்களுக்கு செல்வம் வந்து சேரும்.